மார்ச் இதழில்

வேற்றுமைகளில்தான் அழகும் மகிழ்ச்சியும் வளமையும் செழுமையும் உள்ளது. அதனால்தான் படைப்பில் ஒன்று மற்றொன்றைப் போல இல்லை.
படைப்பில் அந்தந்த இனத்திற்கே (ஆண் இனம், பெண் இனம்) உரித்தான வேற்றுமைகள் பல உள. இறைவனின் படைப்பில் உயர்ந்த படைப்பு மனிதன் என்கின்றோம். அறிவும் அறிவியலும் வளர வளர, படைப்பில் உள்ள வேற்றுமைகளைக் களைய மனிதன் முற்படும்போதும், ஒன்றில் இருப்பதை மற்றொன்றுக்கு மாற்றிப் புதியவற்றை உருவாக்க முயல்கையிலும் படைப்பின் சீரமைப்பில் சீற்றம் உருவாகின்றது.

மனிதப் பிறவியிலும் ஆண் ஆணாக இருக்க வேண்டும்; பெண் பெண்ணாக இருக்க வேண்டும். இதை அடக்குமுறை/ஏற்றத்தாழ்வு என்று ஏன் கருதுகின்றோம்? அந்தந்த நிலைகளுக்கே உரிய சிறப்புகள் ஏராளம். பெண்ணைப் போல, ஆண் செயல்பட்டாலும், அல்லது தன் நிலைக்கு மாறாகப் பெண் செயல்பட்டாலும் சமுதாயச் சமநிலை சீர்குலைகின்றது. எடுத்துக்காட்டாக, உடை, உணவு (மது போன்றவை) ஒப்பனை, தொழில் போன்றவை. இதில் ஒருவர் இன்னொருவரைப் போல இருக்க முயல்வதால், எவ்வளவோ சிக்கல்கள் இன்று சமுதாயத்தில் பெருகியுள்ளன. வேற்றுமைகளைப் போற்றியவையே வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் போன்றவையாகும். ஆனால், இன்றோ அவற்றைப் பற்றிப் பேசுவோரை பழமைவாதிகள் என்று முத்திரைக் குத்தி, ஏளனமாகப் பார்க்கும் நிலை உருவாகி வருகின்றது. ஒவ்வொருவரும் அவரவர் பிறப்பு நிலையில் நின்று, சிறந்து விளங்குவதே சிறப்பு என்னும் எனது கூற்றைப் பலர் எதிர்க்கலாம். ஆனால் அதன் விளைவுகளைச் சந்திக்கின்றோம் என்பதை மறுக்க முடியாது. அதனதன் நிலையில் இருக்க வேண்டுமென்கையில் சமுதாயத்தில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளையோ, குறைபாடுகளையோ நான் கூறவில்லை. படைப்பின் வேற்றுமைகளையே நான் சொல்ல விழைகின்றேன்.

மார்ச் மாதம் என்றாலே மகளிர் நாள் நினைவுக்கு வரும். அதே மாதத்தில்தான் நீர் நாளும், வன நாளும் கொண்டாடப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்வோம். படைப்பை அதன் போக்கில், படைத்தவனின் நோக்கில் வளர்த்தால் செழுமையும் வளமையும் திளைக்கும். ஒன்றை மற்றொன்றாக மாற்ற முயல்கையில் சீரழிவுகளே மிஞ்சும்.
மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கை என்பதே நம் அனைவரின் நோக்கம். அந்த நோக்கில் ஒற்றுமையோடு, படைப்பில் உள்ள வேற்றுமைகளைப் போற்றுவோம்.

ஆ. சிலுவை முத்து, ச.ச.
ஆசிரியர்